காதல் வலையில் வீழ்த்தி இளம் மாணவிகளிடம் நூதன முறையில் நகைகளைக் சுருட்டி, அந்தப் பணத்தில் சொந்தமாக ஆம்னி பஸ் மற்றும் சொகுசு கார்களை வாங்கி ஆடம்பரமாக வலம் வந்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ளபகுதியைச் சேர்ந்தவர் ஜெனிஷ் (25). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியும் ஒரு குழந்தையும் உள்ள நிலையில், இவர் அப்பகுதியில் சவுண்ட் சர்வீஸ் பிசினஸ் நடத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில்தான், பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஒருவர் ஜெனிஷ் மீது காவல் நிலையத்தில் திடுக்கிடும் புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில், ஜெனிஷ் தன்னை ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி, தன்னிடம் இருந்து 40 பவுன் தங்க நகைகளைப் பறித்ததுடன், பாலியல் ரீதியாகவும் தொந்தரவு செய்து மிரட்டுவதாகக் கூறியிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் போக்சோ உள்ளிட்ட கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஜெனிஷை அதிரடியாகக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஜெனிஷிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியபோது, திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிளஸ்-2 மாணவி மட்டுமல்லாமல், மேலும் ஒரு கல்லூரி மாணவி மற்றும் வசதி படைத்த 3 திருமணமான பெண்களையும் அவர் குறிவைத்து வளைத்திருப்பது விசாரணையில் அம்பலமானது.
இனிக்க இனிக்கப் பேசி பெண்களைத் தன் வலையில் வீழ்த்தும் ஜெனிஷ், அவசரத் தேவை என்று பொய் கூறி அவர்களிடம் இருந்த நகைகளை ஒவ்வொன்றாகப் பெற்றுள்ளார். அந்த நகைகளை உடனடியாக விற்றுப் பணமாக்கிய அவர், அந்தப் பணத்தை வைத்து ஒரு ஆம்னி பஸ் மற்றும் 2 சொகுசு கார்களை வாங்கி விஐபி போல ஆடம்பரமாக வலம் வந்துள்ளார். அதுமட்டுமின்றி, அந்த வாகனங்களை வாடகைக்கு விட்டும் கூடுதல் லாபம் பார்த்துள்ளார்.
மாணவிகளிடம் மட்டும் ஜெனிஷ் சுமார் 66 பவுன் நகைகளை அடித்து மோசடி செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுபோக, திருமணமான பெண்கள் அவரிடம் கொடுத்து ஏமாந்த நகைகளின் கணக்குகளையும் போலீசார் தற்போது தீவிரமாகச் சேகரித்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி, பாதிக்கப்பட்ட பெண்களின் நகைகளைக் கொண்டு தனது சவுண்ட் சர்வீஸ் தொழிலுக்காக அதிநவீன ஜெனரேட்டர்கள் மற்றும் ஸ்பீக்கர்கள் போன்ற விலையுயர்ந்த உபகரணங்களையும் அவர் வாங்கிக்குவித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் மோசடிப் பணத்தில் வாங்கிய ஆம்னி பஸ் மற்றும் கார்களை அதிகாரப்பூர்வமாகப் பறிமுதல் செய்ய போலீசார் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.
ஜெனிஷால் ஏமாற்றப்பட்டோ அல்லது பாதிக்கப்பட்டோ வேறு யாராவது பெண்கள் இருந்தால், அவர்கள் தயங்காமல் வந்து தைரியமாகப் புகார் அளிக்கலாம் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படிப் புகாரளிக்கும் பெண்களின் பெயர் மற்றும் அந்தரங்க விவரங்கள் முழுமையாக ரகசியமாக வைக்கப்படும் என்றும் போலீசார் உறுதியளித்துள்ளனர்.
