மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், சவுதி அரேபியாவிலிருந்து கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு இந்தியா வந்த ‘ஷென்லாங் சூயஸ்மேக்ஸ்’ என்ற எண்ணெய் கப்பல், உலகின் மிக முக்கிய கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை வெற்றிகரமாகக் கடந்து மும்பை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

மேலும் ஈரானுக்கும் இஸ்ரேல்-அமெரிக்காவுக்கும் இடையிலான மோதல் காரணமாக இப்பாதையில் கடும் போக்குவரத்து கட்டுப்பாடுகளும் தாக்குதல்களும் நிலவி வந்த சூழலில், சுமார் 1.35 லட்சம் டன் கச்சா எண்ணெயுடன் வந்த இந்தக் கப்பல் பாதுகாப்பாக இந்தியா வந்து சேர்ந்திருப்பது எரிசக்தி பாதுகாப்பில் முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

மேலும் இந்தியரான கேப்டன் சுக்ஷாந்த் சிங் சந்து தலைமையிலான குழுவினர், ஈரான் கடற்படையின் கண்காணிப்பிலிருந்து தப்பிக்க கப்பலின் தானியங்கி அடையாள அமைப்பை அணைத்துவிட்டு, ‘டார்க் மோட்’ எனப்படும் ரகசிய முறையில் இந்த அபாயகரமான பகுதியைத் தந்திரமாகக் கடந்துள்ளனர்.

இந்தக் கப்பலின் வருகைக்குப் பின்னால் இந்தியாவின் தீவிரமான தூதரக முயற்சிகளும் பெரும் பங்கு வகித்துள்ளன. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சருடன் நடத்திய தொடர் பேச்சுவார்த்தைகளின் பலனாக, இந்திய எண்ணெய் கப்பல்களுக்குப் பாதுகாப்பான பாதையை வழங்க ஈரான் ஒப்புக் கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாகவே, ஹார்முஸ் ஜலசந்தியில் பிற நாட்டு கப்பல்கள் தாக்குதலுக்குள்ளான நிலையிலும், இந்தியாவுக்குச் சொந்தமான மற்றும் இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் சுமந்து வரும் கப்பல்கள் தடையின்றிப் பயணிக்க முடிகிறது. இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் பெரும் பகுதி இப்பாதை வழியாகவே நடைபெறுவதால், இந்த இராஜதந்திர வெற்றி நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு பெரும் ஆறுதலை அளித்துள்ளது.