ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா கமேனியைச் சுற்றியுள்ள மர்மங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பிப்ரவரி 28-ஆம் தேதி நடைபெற்ற தாக்குதலில் அவர் படுகாயமடைந்ததாகவும், தற்போது கோமா நிலையில் இருப்பதாகவும் மேற்கத்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதால் மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் நாளிதழான ‘தி சன்’, 56 வயதான மொஜ்தபா கமேனி தெஹ்ரானில் உள்ள சினா பல்கலைக்கழக மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளதாகச் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த மருத்துவமனையின் ஒரு பகுதி பலத்த பாதுகாப்புடன் சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும், ஈரானின் மருத்துவக் கல்வி அமைச்சர் ரெசா ஜாபர்கண்டி நேரடியாக அவரது சிகிச்சையைக் கண்காணித்து வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 28 அன்று நடைபெற்ற வான்வழித் தாக்குதலில் மொஜ்தபாவின் தந்தையும், அப்போதைய உச்ச தலைவருமான அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். அந்தத் தாக்குதலின்போது மொஜ்தபாவுக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டதாகத் தெரிகிறது. அவரது ஒரு கால் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், வயிறு மற்றும் கல்லீரல் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், இந்தத் தகவல்களை ஈரானிய அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
இது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுகையில், “மொஜ்தபா கமேனி ஏதோ ஒரு வடிவத்தில் உயிருடன் இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். அவர் படுகாயமடைந்திருக்கலாம், ஆனால் அவர் உயிருடனேயே இருக்கிறார்” எனத் தெரிவித்துள்ளார். ஈரானில் போர் தொடங்கியதிலிருந்து அவர் பொதுவெளியில் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மொஜ்தபா கமேனியின் உடல்நிலை குறித்த மர்மங்களுக்கு மத்தியில், சமீபத்தில் வெளியிடப்பட்ட அவரது புகைப்படம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அந்தப் படம் பல ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட பழைய புகைப்படம் என்றும், அதில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் பிபிசி உண்மைச் சரிபார்ப்புத் தெரிவிக்கிறது. கூகுளின் ‘SynthID’ கருவி மூலம் அந்தப் படம் திருத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மார்ச் 8-ஆம் தேதி மொஜ்தபா கமேனி புதிய உச்ச தலைவராக அறிவிக்கப்பட்டார். ஆனால், அவர் நேரடியாக நாட்டு மக்களிடம் பேசாமல், தொகுப்பாளர் ஒருவர் செய்தியை வாசிக்கும் வகையிலேயே அவரது உரைகள் பகிரப்பட்டன. அதிகாரப்பூர்வமான கேமரா காட்சிகள் ஏதும் வெளியாகாதது, அவரது உடல்நிலை குறித்த ஊகங்களை மேலும் வலுப்படுத்தியுள்ளது. மேலும் ஈரானிய அரசு ஊடகங்கள் அவரை “காயமடைந்த போர்வீரன்” என்று குறிப்பிடுவது, அவர் தீவிரத் தாக்குதலில் பாதிக்கப்பட்டிருப்பதை மறைமுகமாக உணர்த்துவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
