மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரமடைந்து வரும் நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்டுள்ள அதிரடி அறிக்கை உலக நாடுகளிடையே பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
ஈரான் மீதான வான்வழித் தாக்குதலில் அந்நாட்டின் உச்சத் தலைவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா கமேனி காயம் காரணமாகக் கேமரா முன் தோன்றாமல் இருப்பது பல்வேறு யூகங்களை எழுப்பியுள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த நெதன்யாகு, “சன்னி மற்றும் ஷியா ஆகிய இரு பிரிவினருமே பயங்கரவாதிகள்; அவர்கள் ஒட்டுமொத்த உலகிற்கும் அச்சுறுத்தலாக உள்ளனர்” என்று சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்துள்ளார். இந்தப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் வரை இஸ்ரேல் ஓயாது என்றும் அவர் சூளுரைத்துள்ளார்.
லெபனான் எல்லை விவகாரத்தில் ஹிஸ்புல்லா அமைப்பிற்கு ஆதரவாகச் செயல்படும் லெபனான் அரசு, “நெருப்புடன் விளையாடுகிறது” என்று எச்சரித்துள்ள நெதன்யாகு, அவர்கள் மீது மிகக் கடுமையான ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெளிவுபடுத்தியுள்ளார். ஈரானிய மக்களின் ஆதரவின்றி அந்நாட்டு ஆட்சியை வீழ்த்த முடியாது என்பதால், அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் போர் எப்போது முடிவுக்கு வரும் என்பது குறித்து நெதன்யாகு எவ்விதத் தகவலையும் வெளியிடாத நிலையில், சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு விலைவாசி உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பெஞ்சமின் நெதன்யாகுவின் இந்த ஆவேசமான பேச்சு, மத்திய கிழக்கில் நீண்ட காலப் போருக்கு வித்திட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
