ஈரான் உடனான ராணுவ மோதலில் அமெரிக்கா மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதாகவும், ஈரானின் ராணுவக் கட்டமைப்புகள் முற்றிலும் முறியடிக்கப்பட்டுவிட்டதாகவும் அமெரிக்காவின் 47-வது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நீடித்து வரும் போர் சூழலில், அமெரிக்கா வெற்றி பெறவில்லை எனச் சில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இதனைத் திட்டவட்டமாக மறுத்துள்ள டொனால்ட் ட்ரம்ப், ‘நியூயார்க் டைம்ஸ்’ போன்ற முன்னணி ஊடகங்கள் தவறான தகவல்களைப் பரப்பி வருவதாகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

அவர் பேசுகையில், “ஈரான் உடனான போரில் அமெரிக்கா வெற்றி பெறவில்லை என்று கூறுவது முற்றிலும் பொய். ஈரானைத் துடைத்தெறிந்துவிட்டோம் என்பதே நிதர்சனம்,” என்று ஆவேசமாகத் தெரிவித்தார் ஈரானின் பாதுகாப்பு அரணாகக் கருதப்படும் ராணுவக் கட்டமைப்புகள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்கள் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக ஈரானின் கடற்படை மற்றும் விமானப்படை தளங்கள், அந்நாட்டின் அதிநவீன ஏவுகணை மற்றும் ட்ரோன் (Drone) தொழில்நுட்பக் கட்டமைப்புகள், ஆகியவை அமெரிக்கப் படைகளால் முற்றிலும் துடைத்தெறியப்பட்டுவிட்டதாக ட்ரம்ப் உறுதிபடக் கூறியுள்ளார்.

மேலும், ஈரான் நாட்டின் முக்கியத் தலைவர்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியதை அமெரிக்காவின் வெற்றியாக அவர் கருதுகிறார். “ஈரான் தலைவர்களைக் கொல்வதை, அமெரிக்காவின் 47-வது அதிபராக நான் பெருமையாகக் கருதுகிறேன். அமெரிக்காவின் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை வரலாற்றில் முக்கியமானது,” என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நிஜமான போர் வெற்றிகளை மறைத்து, தவறான பிம்பத்தை உருவாக்க சில சர்வதேச ஊடகங்கள் முயற்சிப்பதாகவும், அவை அமெரிக்காவின் கௌரவத்தைச் சிதைக்கப் பார்ப்பதாகவும் அவர் தனது உரையில் சாடியுள்ளார். இந்த விவகாரம் தற்போது சர்வதேச அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.