ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே வெடித்துள்ள போர், உலக நாடுகளின் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த போர் சூழலால் இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் வரலாறு காணாத எரிபொருள் தட்டுப்பாட்டையும், பொருளாதார நெருக்கடியையும் சந்தித்து வருகிறது.
ஏற்கனவே பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள பாகிஸ்தான், தனது எரிபொருள் தேவைக்காக இறக்குமதியையே பெரிதும் நம்பியுள்ளது. தற்போது போர் காரணமாக ஈரான் ‘ஹார்முஸ்’ ஜலசந்தியை மூடியுள்ளதால், பாகிஸ்தானுக்கு எண்ணெய் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை விண்ணைத் தொட்டுள்ள நிலையில், அந்நியச் செலாவணி கையிருப்பு இல்லாத பாகிஸ்தான் திணறி வருகிறது.
எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதற்காக பாகிஸ்தான் அரசு பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி அரசு ஊழியர்கள் 50% பேர் வீட்டிலிருந்தே பணிபுரிய உத்தரவிடப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களும் இதைப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாடு சந்திக்கும் நிதி நெருக்கடியைச் சமாளிக்க, மத்திய மற்றும் மாநில அமைச்சர்களுக்கு அடுத்த இரண்டு மாதங்களுக்கு ஊதியம் மற்றும் இதர படிகள் வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தில் 25% குறைக்கப்பட்டுள்ளது.
தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க கல்வி நிறுவனங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கடந்த மார்ச் 6-ஆம் தேதி முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு 55 ரூபாய் வரை பாகிஸ்தான் அரசு உயர்த்தியுள்ளது. இதன்படி, தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் 321 ரூபாய்க்கும், அதிவேக டீசல் 335.86 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. எரிபொருள் விலை உயர்வால் விமானக் கட்டணங்களும் பல மடங்கு அதிகரித்துள்ளன.
திடீர் விலை உயர்வு மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டால் கராச்சி, லாகூர், இஸ்லாமாபாத் போன்ற முக்கிய நகரங்களில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். மேலும் பல இடங்களில் எரிபொருள் தீர்ந்துவிட்டதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். போர் நீடித்தால் பாகிஸ்தானின் மாத எண்ணெய் இறக்குமதிச் செலவு 60 கோடி டாலராக உயரும் என அஞ்சப்படுகிறது. இது அந்த நாட்டின் பொருளாதாரத்தை முற்றிலும் முடக்கிவிடும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்
