மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி விடுத்த பகிரங்க மிரட்டலைத் தொடர்ந்து, அமெரிக்காவின் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் ஈரானுக்கு எதிராக ‘இறுதிக்கட்ட திட்டத்தை’ (Final Plan) கையில் எடுத்துள்ளதாகத் தெரிகிறது. இதன் ஒரு பகுதியாக, பிரிட்டனில் உள்ள விமானப்படை தளத்தில் அமெரிக்காவின் அதிநவீன போர் விமானங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.

அமெரிக்கா இந்த முறை நேரடியாகத் தனது நாட்டிலிருந்து தாக்குதல் நடத்தாமல், பிரிட்டனின் ஆர்.ஏ.எஃப் ஃபேர்ஃபோர்ட் (RAF Fairford) விமானப்படை தளத்தைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இதற்காக மூன்று பி-1பி லான்சர் (B-1B Lancer) ரக குண்டுவீச்சு விமானங்கள் அங்கு எந்நேரமும் புறப்படத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஈரானின் நிலத்தடி ராணுவ மையங்களை அழிப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் எனக் கூறப்படுகிறது.

அல் ஜசீரா வெளியிட்டுள்ள தகவலின்படி, அமெரிக்க போர் விமானங்களில் ‘பங்கர்-பஸ்டர்’ (Bunker-Buster) ரக வெடிகுண்டுகள் ஏற்றப்பட்டு வருகின்றன. இவை சாதாரண குண்டுகள் அல்ல; ஜேடிஏஎம் (JDAM) தொழில்நுட்பம் மூலம் ஜிபிஎஸ் உதவியுடன் இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கக்கூடியவை. இந்தக் குண்டுகள் பாறைகளையும், தடிமனான கான்கிரீட் சுவர்களையும் துளைத்துச் சென்று நிலத்தின் அடியில் 200 அடி ஆழத்தில் உள்ள இலக்குகளைக் கூட நிர்மூலமாக்கும் திறன் கொண்டவை. ஈரானின் ரகசிய ஏவுகணை தளங்கள் மற்றும் நிலத்தடி சுரங்கங்களை குறிவைத்து இந்தத் தாக்குதல் அமையலாம் என்று அஞ்சப்படுகிறது.

ஆரம்பத்தில் அமெரிக்காவின் இந்தத் திட்டத்திற்கு அனுமதி வழங்க மறுத்த பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர், சைப்ரஸில் உள்ள பிரிட்டன் ராணுவத் தளம் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலுக்குப் பிறகு தனது நிலப்பாட்டை மாற்றிக்கொண்டார். மார்ச் 1-ஆம் தேதி முதல் அமெரிக்காவின் கோரிக்கைக்கு பிரிட்டன் பச்சைக்கொடி காட்டியுள்ளது. இருப்பினும், பிரிட்டன் மக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ‘யூகவ்’  நடத்திய ஆய்வில், வெறும் 10 சதவீத மக்கள் மட்டுமே இந்த ராணுவ நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பிரிட்டன் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரானின் ஏவுகணைகளைத் தடுக்க கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் மிகப்பெரிய பாதுகாப்பு வளையத்தை உருவாக்கியுள்ளன. வல்லரசு நாடுகளின் இந்த நேரடி மோதல் போக்கு, மத்திய கிழக்கு நாடுகளில் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என்றும், இது மூன்றாவது உலகப் போருக்கான தொடக்கமாக அமையலாம் என்றும் சர்வதேச அரசியல் நோக்கர்கள் எச்சரிக்கின்றனர்.