அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் தற்போது ஒரு தீர்க்கமான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தப் போர் புதைகுழியில் இருந்து வெளியேற முடியாமல் திணறி வருகிறார்.

ஆரம்பத்தில் ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திவிடலாம் என்ற கணக்குடன் களமிறங்கிய அமெரிக்காவிற்கு, ஈரானின் பதிலடி தாக்குதல்கள் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளன.

இதுவரை ஈரானிய ஏவுகணைத் தாக்குதல்களில் 17 அமெரிக்க ராணுவத் தளங்கள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. மேலும், இரண்டு அமெரிக்க எண்ணெய் டேங்கர் கப்பல்களை ஈரான் அழித்துள்ளதால், பாரசீக வளைகுடா பகுதியில் அமெரிக்காவின் ஆதிக்கம் கேள்விக்குறியாகியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முழுமையாகத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும், அங்கு கண்ணிவெடிகளைப் புதைத்திருப்பதும் அமெரிக்கப் படைகளுக்குப் பெரும் முட்டுக்கட்டையாக மாறியுள்ளது.

தற்போதைய “திட்டம் A” (Plan A) தோல்வியடைந்துள்ளதை உணர்ந்துள்ள டிரம்ப், ஈரானை நிலைகுலைய வைக்க “திட்டம் B” (Plan B) என்ற புதிய வியூகத்தை வகுத்துள்ளார். இதன்படி, ஈரானின் ராணுவ நிலைகளைத் தாண்டி, அந்நாட்டின் அடிப்படை உள்கட்டமைப்புகளான பள்ளிகள், மருத்துவமனைகள், எரிவாயு ஆலைகள் மற்றும் எண்ணெய் கிடங்குகளைக் குறிவைக்கும் ‘தஹியா கோட்பாடு’ (Dahiya Doctrine) செயல்படுத்தப்பட உள்ளது.

இதன் மூலம் ஈரானியப் பொதுமக்களைத் துயரத்தில் ஆழ்த்தி, அவர்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்காமல் செய்வதன் மூலம் அவர்களைத் தங்கள் அரசுக்கு எதிராகவே கிளர்ச்சி செய்யத் தூண்டுவதே டிரம்பின் நோக்கம். இந்தக் கிளர்ச்சியின் மூலம் முஜ்தபா தலைமையிலான ஈரானிய ஆட்சியை வீழ்த்தலாம் என அமெரிக்காவும் இஸ்ரேலும் நம்புகின்றன.

இருப்பினும், டிரம்பின் இந்த “திட்டம் B” இஸ்ரேலுக்குப் பெரும் அச்சுறுத்தலாக முடியும் என அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். அமெரிக்கா இந்தப் போரில் இருந்து பின்வாங்கினால் அல்லது மறைமுகப் போராக (Proxy War) இதை மாற்றினால், ஈரான் தனது முழு பலத்தையும் இஸ்ரேல் மீது திருப்பும் அபாயம் உள்ளது.

ஏற்கனவே ஹிஸ்புல்லா மற்றும் ஹூதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேலை நிலைகுலைய வைத்து வரும் நிலையில், அமெரிக்காவின் விலகல் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவைத் தனிமைப்படுத்தும். ஈரான் தனது ஹார்முஸ் ஜலசந்தி பிடியை மேலும் வலுப்படுத்தி, செங்கடல் பாதையையும் முடக்கினால் அது உலகளாவிய எரிசக்தி நெருக்கடிக்கு வழிவகுக்கும்.

மொத்தத்தில், ஈரானை வீழ்த்தப் போட்ட திட்டம் தற்போது அமெரிக்காவையும் இஸ்ரேலையும் ஒரு தீர்க்க முடியாத பொறியில் சிக்க வைத்துள்ளது.