உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த உஜ்ஜாவல் மிஸ்ரா என்ற மாணவர், ராஜஸ்தானின் கோட்டாவில் ஜேஇஇ நுழைவு தேர்வுக்காக பயிற்சி பெற்று வந்தார். லக்னோவில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்ததால், அவரை அழைத்துச் செல்ல அவரது தந்தை தீபக் குமார் கோட்டாவுக்கு வர திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், தேர்வுக்கு ஒரு நாளே மிச்சம் இருக்கையில், உஜ்ஜாவல் விடுதியில் இருந்து வெளியேறி கோட்டா ரயில் நிலையம் சென்றார்.
இதனையடுத்து திடீரென ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். உடனே சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மாணவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான எந்தக் காரணமும் அல்லது கடிதமும் அவரது அறையில் இருந்து மீட்கப்படவில்லை. கடந்த ஜனவரி மாதத்திலிருந்து கோட்டா நகரத்தில் இது பத்தாவது பயிற்சி மாணவர் தற்கொலை சம்பவம் என்பதால், மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் குறித்த வினாக்கள் மேலும் அதிகரிக்கின்றன.
