மும்பை மின்சார ரயிலில் பெண் ஒருவர் தனது கைப்பையினுள் உயிருள்ள கோழி ஒன்றை மறைத்து வைத்து பயணம் செய்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

போரிவிலியில் இருந்து சர்ச்கேட் நோக்கிச் சென்ற ரயிலில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அந்தப் பையினுள் இருந்த கோழிக்கு அருகில் இருந்த மற்றொரு பயணி உணவு ஊட்டியது இன்னும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

சக பயணி ஒருவர் இதனை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு, ரயிலில் இது போன்ற செயல்கள் எப்படி அனுமதிக்கப்படுகின்றன என்று கேள்வி எழுப்பியதோடு, சம்பந்தப்பட்ட பெண் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்தார்.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, மும்பை காவல்துறையினர் உடனடியாக இதற்குப் பதிலளித்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு ரயில்வே காவல்துறைக்கு அவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

“>

 

ரயிலில் பயணம் செய்தபோது அந்த கோழி யாருக்கும் தொந்தரவு கொடுக்கவில்லை என்றாலும், பொதுப் போக்குவரத்தில் இது போன்ற விலங்குகளைக் கொண்டு செல்வது விதிமுறை மீறல் என்பதால் பயணிகள் மத்தியில் இது விவாதப் பொருளாகியுள்ளது.

மும்பை ரயில்களில் இது போன்ற விசித்திரமான சம்பவங்கள் நடப்பது இப்போது தொடர்கதையாகி வருகிறது.