அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது நடத்திய தாக்குதல்களால் மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல், தற்போது வாகனத் துறையையும் அச்சுறுத்தத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, எல்பிஜி மற்றும் எரிபொருள் போக்குவரத்துக்கு முக்கிய வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளதால், தொழில்துறை தரத்திலான யூரியா விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

நவீன பிஎஸ்6  டீசல் என்ஜின்களில் புகையைக் குறைக்கப் பயன்படும் ‘அட்ப்ளூ’ எனும் திரவத்தைத் தயாரிக்க இந்த யூரியா மிகவும் அவசியம். துபாய் மற்றும் எகிப்து துறைமுகங்கள் வழியாக வரும் இந்த யூரியா விநியோகம் தடைபட்டுள்ளதால், அடுத்த மாதத்தில் பேருந்துகள், லாரிகள் மற்றும் டீசல் கார்களைச் சாலைகளில் இயக்குவது பெரும் சவாலாக மாறக்கூடும்.

இந்த டீசல் எக்ஸாஸ்ட் ஃப்ளூயிட்  என்பது யூரியா மற்றும் தூய்மையான நீர் கலந்த ஒரு கரைசலாகும். இது என்ஜினிலிருந்து வெளியேறும் நச்சுப் புகையைச் சிதைத்து நீராகவும் நைட்ரஜனாகவும் மாற்றுகிறது. வாகனத்தின் DEF தொட்டி காலியானால், என்ஜின் தானாகவே அதன் சக்தியைக் குறைத்து ‘லிம்ப் மோடு’ நிலைக்குச் சென்றுவிடும். திரவத்தை மீண்டும் நிரப்பும் வரை என்ஜினைத் தொடங்க முடியாது என்பதால், யூரியா தட்டுப்பாடு நீடித்தால் பிஎஸ்6 வாகனங்களின் உற்பத்தி மற்றும் இயக்கம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஈரான் போர் காரணமாக ஏற்பட்டுள்ள இந்த மூலப்பொருள் தட்டுப்பாட்டைச் சமாளிக்க மாற்று வழித்தடங்களை வாகன உற்பத்தியாளர்கள் தற்போது ஆராய்ந்து வருகின்றனர்.