அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவும் மோதல்களுக்கு மத்தியில், அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் மீதான எண்ணெய் வர்த்தகத் தடைகளில் மார்ச் 20 முதல் ஏப்ரல் 19 வரை 30 நாட்களுக்குத் தற்காலிக விலக்கு அளித்துள்ளார். இதன் காரணமாக, 2019-ம் ஆண்டிற்குப் பிறகு நிறுத்தப்பட்டிருந்த ஈரானிய கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி கொள்முதலை இந்தியா மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.
தற்போது ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாட்டைப் போக்க இது ஒரு முக்கிய வழியாகக் கருதப்படுகிறது. ஈரான் தனது எண்ணெயை சர்வதேச சந்தை விலையை விட ஒரு பீப்பாய்க்கு 6 முதல் 8 டாலர் கூடுதல் விலைக்கு இந்தியாவுக்கு வழங்க முன்வந்துள்ளது.
இந்த வர்த்தகத்திற்கான தொகையை டாலராகவோ அல்லது இந்திய ரூபாயாகவோ செலுத்த ஈரானிய வர்த்தகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, சரக்கு வந்து சேர்ந்த ஏழு நாட்களுக்குள் பணம் செலுத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் இந்திய சுத்திகரிப்பு ஆலைகளுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ரஷ்யாவிடமிருந்து அதிகளவில் எண்ணெய் இறக்குமதி செய்து வரும் இந்தியா, தற்போது நிலவும் தற்காலிகத் தளர்வைப் பயன்படுத்தி தனது எரிசக்தி தேவையைப் பூர்த்தி செய்ய முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இந்த 30 நாள் காலக்கெடுவுக்குள் எவ்வளவு கச்சா எண்ணெயைக் கொள்முதல் செய்ய முடியும் என்பதில் இந்திய நிறுவனங்கள் தற்போது தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.
