அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போரினால் கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கு முக்கிய பாதையான ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளது. இதனால் உலகளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த நெருக்கடியான சூழலைப் பயன்படுத்தி சீனா மிகப்பெரிய லாபத்தை ஈட்டி வருகிறது. எண்ணெய் விநியோகத்தை உறுதி செய்ய நாடுகள் ஒரே நேரத்தில் அதிக அளவு எண்ணெய்யைச் சேமிக்க விரும்புவதால், சுமார் 20 லட்சம் பேரல் எண்ணெய் சுமந்து செல்லும் ‘VLCC’ எனப்படும் மிகப்பெரிய எண்ணெய் டேங்கர் கப்பல்களின் தேவை அதிகரித்துள்ளது.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சீனக் கப்பல் கட்டும் நிறுவனங்கள் பல நாடுகளிடமிருந்து கோடிக்கணக்கான டாலர் மதிப்பிலான புதிய ஆர்டர்களைக் குவித்து வருகின்றன.
முன்பு தென் கொரிய நிறுவனங்களை நம்பியிருந்த ஸ்விட்சர்லாந்து மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளின் முன்னணி நிறுவனங்கள் கூட, இப்போது குறைந்த செலவில் வேகமாகக் கப்பல்களைக் கட்டித் தரும் சீனாவை நோக்கித் திரும்பியுள்ளன.
தற்போதைய சூழலில் உலகளாவிய கப்பல் கட்டும் ஒப்பந்தங்களில் சுமார் 60 சதவீதத்திற்கும் அதிகமானவற்றைச் சீனா தனது வசப்படுத்தியுள்ளது. போர் காரணமாக எண்ணெய் டேங்கர்களின் வாடகை மற்றும் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது.
மற்ற நாடுகள் எரிபொருள் விலையேற்றத்தால் அவதிப்படும் வேளையில், சீனா தனது பலமான உற்பத்தித் திறனால் கப்பல் கட்டும் துறையில் உலக நாடுகளை விஞ்சி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
