மத்திய கிழக்கில் கடந்த மூன்று வாரங்களாக நடைபெற்று வரும் போரினால் உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், ஈரான் ஒரு சாதுர்யமான ராஜதந்திர நகர்வை மேற்கொண்டுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியா மற்றும் சீனாவின் கப்பல்கள் செல்ல ஏற்கனவே அனுமதி அளித்திருந்த ஈரான், தற்போது அமெரிக்காவின் நெருங்கிய நண்பர்களான ஜப்பான் மற்றும் தென்கொரியாவிற்கும் சலுகைகளை வழங்கியுள்ளது.
ஜப்பானிய ஊடகத்திற்குப் பேட்டியளித்த ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, ஹார்முஸ் ஜலசந்தி அனைவருக்கும் மூடப்படவில்லை என்றும், தங்களைத் தாக்கும் எதிரி நாடுகளுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஜப்பான் தனது கச்சா எண்ணெய் தேவையில் 90 சதவீதத்தை இந்த வழித்தடம் மூலமே இறக்குமதி செய்வதால், ஈரானின் இந்த அறிவிப்பு அந்நாட்டிற்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. அதேபோல் தென்கொரியாவுடனும் ஈரான் சுமுகமான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கி உள்ளது.
மறுபுறம், இந்த நாடுகளைத் தன் பக்கம் இழுக்க முயன்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அவர்களின் ஒத்துழைப்பு கிடைக்காததால் பெரும் ஏமாற்றமடைந்துள்ளார்.
தனது நட்பு நாடுகளையே ஈரானின் பக்கம் சாயச் செய்துள்ள இந்த அதிரடி மாற்றத்தால், சர்வதேச அரங்கில் டிரம்ப் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
