ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போரில் அமெரிக்கா நேரடியாகக் களமிறங்கியுள்ள நிலையில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து ஈரான் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஈரானில் தங்களுக்குச் சாதகமான ஆட்சி அமையும் வரை பின்வாங்கப் போவதில்லை என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இந்தப் போருக்காக அமெரிக்கா ஏற்கனவே பில்லியன் கணக்கான டாலர்களைச் செலவிட்டு வரும் சூழலில், தற்போது அந்நாட்டை இயற்கைச் சீற்றமும் கடுமையாகப் பதம் பார்த்து வருகிறது.

அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தைத் தாக்கிய ‘கோனா’ (Kona) என்ற சக்திவாய்ந்த புயல் மற்றும் கனமழையினால் ஓவாஹு பகுதியில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நள்ளிரவில் பெய்த பெருமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதில் ஏராளமான வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன.

வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததோடு, முக்கியக் கட்டமைப்புகளும் சேதமடைந்துள்ளன. இந்த இயற்கை பேரிடரால் மட்டும் சுமார் 1 பில்லியன் டாலர் அளவுக்குப் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாகப் புயல் தாக்கியுள்ளதால் அமெரிக்கா தற்போது போர்க்களம் மற்றும் உள்நாட்டுப் பேரிடர் என இரண்டு முனை நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது.