மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் ஆகிய இரு தலைவர்களும் சனிக்கிழமை அன்று தொலைபேசி வாயிலாகப் போர் நிலவரம் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினர்.
அப்போது ஈரானின் பொது உள்கட்டமைப்புகள் மற்றும் அணுசக்தி மையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பிரதமர் மோடி தனது கண்டனத்தைப் பதிவு செய்தார். இதற்குப் பதிலளித்த அதிபர் பெஷெஷ்கியன், “இந்தப் போரை ஈரான் தொடங்கவில்லை; எவ்வித நியாயமான காரணமும் இன்றி அமெரிக்காவும் இஸ்ரேலும் எங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன” என்று குற்றம் சாட்டினார். மேலும், இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர அவர் ஒரு அதிரடி நிபந்தனையையும் விதித்துள்ளார்.
அமெரிக்காவும் இஸ்ரேலும் உடனடியாகத் தங்களது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதல்கள் மீண்டும் நடைபெறாது என்பதற்குப் போதிய உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் பெஷெஷ்கியன் வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே ஈரான் போரை நிறுத்த முன்வரும் என அவர் பிரதமர் மோடியிடம் திட்டவட்டமாகத் தெரிவித்தார். லெபனான், காசா மற்றும் கத்தார் உள்ளிட்ட பகுதிகளில் நடக்கும் வன்முறைகளுக்கு இஸ்ரேலே காரணம் என்று சாடிய அவர், பிராந்திய அமைதியை நிலைநாட்ட சர்வதேச நாடுகள் முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மார்ச் 21 அன்று நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தை, உலக நாடுகளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
