இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபலமான ‘காப் நவீன்’ (Cop Naveen) என்ற பெயரில் வீடியோக்களைப் பதிவிட்டு வரும் காவலர் நவீன், மீண்டும் ஒரு அதிரடி நடவடிக்கையால் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறார். இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் ஒருவர், செல்போனில் பேசிக்கொண்டே போக்குவரத்தை அலட்சியம் செய்து செல்வதைப் பார்த்த நவீன், முதலில் ஹார்ன் அடித்து எச்சரிக்கிறார். ஆனால், அந்த நபர் அதைக் கண்டுகொள்ளாமல் தனது போக்கிலேயே சென்றதால், ஆத்திரமடைந்த நவீன் அவரைத் துரத்திச் சென்று பிடித்துள்ளார்.
அந்த நபர் தொடர்ந்து செல்போனில் பேசிக்கொண்டே இருந்ததால், சுதாரித்த நவீன், சட்டென அவரது கையில் இருந்த செல்போனைப் பிடுங்கி, தனது வாகனத்தின் பையில் வைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. “சட்டத்தை மீறினால் யாருக்கும் பாரபட்சம் காட்ட மாட்டோம்” என அவர் காட்டிய இந்த அதிரடி பாணியை, நெட்டிசன்கள் ஒருபுறம் பாராட்டினாலும், இது குறித்து ஆதரவாகவும் எதிராகவும் கலவையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
