மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் உள்ள மகரிஷி சந்தீபனி வேத வித்யா சன்ஸ்தான் (Maharishi Sandeepani Vedic Vidya Sansthan) பாடசாலையில், சிறுவன் ஒருவன் மிகக் கொடூரமாகத் தாக்கப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சக மாணவனின் படுக்கையில் தூங்கினான் என்ற அற்ப காரணத்திற்காக, அந்தச் சிறுவனை ஒரு நபர் இரக்கமே இன்றி தாக்கும் காட்சிகள் பார்ப்பவர் நெஞ்சைப் பதற வைக்கிறது. கல்வி கற்கும் இடத்தில் இவ்வளவு வன்முறையா எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

​இந்தச் சம்பவம் குறித்து சமூக ஆர்வலர்கள் மற்றும் இணையவாசிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். “சிறு தவறுக்கு இவ்வளவு பெரிய தண்டனையா? இது போன்ற வன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது” எனப் பலரும் கொந்தளித்து வருகின்றனர். இது தொடர்பாக மத்திய பிரதேச முதல்வர் டாக்டர் மோகன் யாதவ் மற்றும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் பிரியங்க் கனூங்கோ ஆகியோர் உடனடியாகத் தலையிட்டு, சம்பந்தப்பட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எக்ஸ் (X) தளத்தில் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.