தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக கூட்டணியில் அங்கமாக இருக்கும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், “நமக்கும் ஆட்சியில் பங்கு வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைக்கத் தொடங்கியுள்ளனர். அதாவது, தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அமைச்சரவையில் தங்களுக்கும் இடம் அளிக்கப்பட வேண்டும் என்பது இவர்களது விருப்பம். காங்கிரஸ் தரப்பிலிருந்து எழுந்துள்ள இந்த ‘அதிகாரப் பங்கு’ குறித்த பேச்சுக்கள், தற்போதைய கூட்டணிக்குள் ஒரு விவாதப் பொருளாக மாறியுள்ளது.

​இந்நிலையில் திண்டுக்கல்லில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஐ. பெரியசாமி, இதற்கு மிகத் தெளிவாகப் பதிலளித்துள்ளார். “ஆட்சியில் பங்கு கேட்பது அவர்களின் ஜனநாயக உரிமை, அதைத் தடுத்த நிறுத்த முடியாது. ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக தனித்து ஆட்சி அமைப்பதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மிகவும் உறுதியாக இருக்கிறார்; இங்கு கூட்டணி ஆட்சிக்கு இடமில்லை” என்று அவர் திட்டவட்டமாகக் கூறிவிட்டார். இதன் மூலம், காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியதிகாரத்தில் பங்கு தர திமுக தயாராக இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.