பா.ஜ.க மாநில துணைத் தலைவர் குஷ்பு, காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகளை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். காங்கிரஸ் கட்சி தனது திட்டங்களுக்கு ஒரு குடும்பத்தின் பெயரை மட்டுமே சூட்டி வருவதாகவும், ஆனால் பிரதமர் மோடி அனைத்துத் திட்டங்களையும் பொதுவான பெயர்களிலேயே அறிவிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தை 125 நாட்களாக உயர்த்தி நாட்டு மக்களுக்கு மோடி பெருமை சேர்த்துள்ளதாகப் புகழ்ந்து தள்ளினார். மேலும், காங்கிரஸ் கட்சி இப்போது செல்வாக்கை இழந்து ‘கரைந்து வரும் கட்சியாக’ மாறிவிட்டதாகக் கிண்டல் செய்த அவர், தேர்தலில் போட்டியிடும் இடங்களில் அவர்கள் வெற்றி பெறுவது சந்தேகம் என்றும் கூறினார்.
தமிழகத்தில் ஆளும் திமுக அரசு, தேர்தல் நெருங்கும் வேளையில் மட்டுமே மக்களைப் பற்றி சிந்திப்பது போல நடிப்பதாகக் குஷ்பு சாடினார். ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மருத்துவர்கள் எனப் பல தரப்பினரும் தங்கள் உரிமைகளுக்காகப் போராடும்போது அவர்களைக் கண்டுகொள்ளாத திமுக, இப்போது வாக்குறுதிகளைக் கொடுத்து ஏமாற்றப் பார்ப்பதாகக் குற்றம் சாட்டினார். ரேஷன் கார்டுதாரர்களுக்குப் பணம் கொடுப்பது மக்களை ஏமாற்றும் செயல் என்று கூறிய அவர், வரும் தேர்தலில் மக்கள் விழிப்புடன் இருப்பார்கள் என்றும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று அவர் மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்பார் என்றும் உறுதியாகத் தெரிவித்தார்.
