உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட்டத்தில், தொடக்கப் பள்ளி ஊழியர்களின் அசுர அலட்சியம் காரணமாக, முதலாம் வகுப்பு படிக்கும் 6 வயது சிறுவன் ஒருவன் வகுப்பறைக்குள்ளேயே பூட்டி வைக்கப்பட்டு வீட்டிற்குச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பொதுமக்களிடையே கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பள்ளி முடிந்த பிறகு சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அந்தப் பிஞ்சு குழந்தை இருட்டு அறைக்குள் மாட்டிக்கொண்டு, வெளியே வர முடியாமல் அழுது கதறியுள்ளது. இச்சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி நெட்டிசன்களின் கண்டனங்களை குவித்து  வருகிறது.

வெள்ளிக்கிழமை அன்று வழக்கம்போல பள்ளிக்கு வந்த அந்த 6 வயது சிறுவன், வகுப்பறையில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தான். மாலையில் பள்ளி நேரம் முடிவடைந்ததும், மற்ற குழந்தைகள் அனைவரும் தங்களது வீடுகளுக்குப் புறப்பட்டுச் சென்றனர். ஆனால், பள்ளியின் ஆசிரியர்களோ அல்லது இதர ஊழியர்களோ வகுப்பறையில் ஏதேனும் குழந்தை இருக்கிறதா என்பதை ஒருமுறை கூடச் சரிபார்க்காமல், வகுப்பறையின் கதவை வெளிப்பக்கமாகப் பூட்டிவிட்டு தங்களது வீடுகளுக்குக் கிளம்பிச் சென்றுவிட்டனர். உள்ளே மாட்டிக்கொண்ட குழந்தை பயத்தில் கதவைத் தட்டியும், சத்தம் போட்டும், அந்த பள்ளி வளாகத்தில் அவனது குரலைக் கேட்க ஒரு மனிதர் கூட இருக்கவில்லை.

பள்ளி முடிந்து நீண்ட நேரமாகியும் குழந்தை வீடு திரும்பாததால் பதற்றமடைந்த பெற்றோர், அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்துள்ளனர். எங்கு தேடியும் குழந்தை கிடைக்காததால், இறுதியாக அவர்கள் பள்ளி வளாகத்திற்கு வந்து பார்த்துள்ளனர். அப்போது, வகுப்பறையின் ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப் பார்த்த பெற்றோருக்குப் பேரிடியாக ஒரு காட்சி காத்திருந்தது. தங்களது செல்லக் குழந்தை இருட்டு அறைக்குள் அழுதுகொண்டே அமர்ந்திருப்பதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். உடனடியாக பள்ளி ஊழியர்களுக்குத் தகவல் கொடுக்கப்பட்டு, அவர்கள் சாவியுடன் ஓடிவந்து பூட்டைத் திறந்த பிறகே குழந்தை மீட்கப்பட்டது. வெளியே வந்தவுடன் பயந்து நடுங்கிய குழந்தை தனது பெற்றோரைக்கட்டிப்பிடித்து அழுத காட்சி பார்ப்போரைக் கண் கலங்கச் செய்தது.

இந்த அலட்சியப் போக்கைக் கண்டித்து சமூக வலைத்தளங்களில் மக்கள் கடுமையான கேள்விகளை எழுப்பி வருகின்றனர். பள்ளி முடியும் போது வகுப்பறையைச் சரிபார்ப்பது ஆசிரியர்களின் கடமை இல்லையா? என்ற விவாதம் புயலாகக் கிளம்பியுள்ளது. இந்த விவகாரம் குறித்துப் பேசிய மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி சமீர், இந்தச் துரதிர்ஷ்டவசமான சம்பவம் குறித்துத் தனக்குத் தகவல் கிடைத்துள்ளதாகவும், இது குறித்து முழுமையான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். விசாரணை அறிக்கை கிடைத்தவுடன், தவறிழைத்த பள்ளி ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.