பெங்களூருவில் உள்ள மிகவும் பிரபலமான உணவகங்களில் ஒன்றான ‘ட்ரஃபிள்ஸ்’ , அதன் ஊழியர் ஒருவரின் தவறான நடத்தை காரணமாக தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. அந்த உணவகத்தின் ஊழியருக்கும், இரண்டு உணவு வோல்கர்களுக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அதிர்ச்சிச் சம்பவம் பெங்களூருவின் செயின்ட் மார்க்ஸ் சாலையில் உள்ள ட்ரஃபிள்ஸ் உணவகத்தின் கிளையில் நடந்துள்ளதாகத் தெரிகிறது. உணவகம் குறித்து வீடியோ பதிவு செய்ய வந்த வோல்கர்களிடம், “இங்கே நீங்கள் வீடியோ எடுக்க அனுமதி இல்லை” என்று கூறி அங்கிருந்த ஊழியர் ஒருவர் மிகவும் கோபமாகத் தடுத்துள்ளார்.
View this post on Instagram
அதுமட்டுமன்றி, அந்த ஊழியர் வோல்கர்களை முரட்டுத்தனமாகக் கையாண்டு, உணவகத்தை விட்டு வெளியே தள்ள முயன்றதாகக் கூறப்படுகிறது. இந்தத் தகராறு அங்கிருந்தவர்களால் வீடியோ எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பதிவேற்றப்பட்ட சில நிமிடங்களிலேயே காட்டுத்தீயாகப் பரவியது. வாடிக்கையாளர்களை இவ்வளவு மோசமாக நடத்துவதா என்று நெட்டிசன்கள் பலரும் அந்த உணவக நிர்வாகத்திற்கு எதிராகக் கடுமையான கண்டனங்களை அள்ளித் தெளிக்கத் தொடங்கினர்.
இணையத்தில் தங்களுக்கு எதிராகக் கிளம்பிய இந்த பெரும் எதிர்ப்பையும், நெட்டிசன்களின் கொந்தளிப்பையும் உணர்ந்த ட்ரஃபிள்ஸ் உணவக நிர்வாகம் உடனடியாகச் செயலில் இறங்கியது. வாடிக்கையாளர்களிடம் தவறாக நடந்து கொண்ட அந்தச் சம்பந்தப்பட்ட ஊழியரை வேலை நீக்கம் செய்து அதிரடி உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்தச் சம்பவத்திற்குத் தங்களது வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டுள்ள நிர்வாகம், தங்களது உணவகத்தில் வாடிக்கையாளர்களின் மரியாதையே முதன்மையானது என்றும் விளக்கம் அளித்துள்ளது.
