உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் அருகே உள்ள ஹஸ்தினாபூரில், தூக்கத்தில் பாம்பு கடித்துப் பள்ளி தாளாளர் ஒருவர் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட சம்பவம், காவல்துறையின் அதிரடி விசாரணையில் கள்ளக்காதல் மற்றும் காப்பீட்டுப் பணத்திற்காக நடத்தப்பட்ட கொடூரக் கொலை என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனது கள்ளக்காதலன் மற்றும் இரு கூட்டாளிகளுடன் சேர்ந்து, கணவரைத் திட்டமிட்டுப் படுகொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். இந்தச் கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
அதாவது ஹஸ்தினாபூர் பகுதியில் ‘கிருஷ்ணா கிட்ஸ் பப்ளிக் ஸ்கூல்’ என்ற பள்ளியை நடத்தி வந்தவர் 35 வயதான அதுல் பன்வார். இவரும் இவரது மனைவி தாமினியும் கடந்த 2019-ஆம் ஆண்டு காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை காலை அதுல் பன்வாரை அவரது படுக்கையில் பாம்பு கடித்துவிட்டதாகக் கூறி, அவரது மனைவி தாமினி பதற்றத்துடன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், அங்கு மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். விபத்து நடந்த படுக்கையிலேயே ஒரு விஷப்பாம்பும் மீட்கப்பட்டதால் சந்தேகம் அடைந்த போலீசார், உடற்கூறாய்வுக்காக உடலை அனுப்பிவிட்டுத் தீவிர விசாரணையில் இறங்கினர்.
பின்னர் போலீசார் மனைவி தாமினியின் மொபைல் போன் அழைப்புகளை ஆய்வு செய்த போது, அவர்களது பள்ளி வாகன ஓட்டுநரான துஷார் என்பவருடன் அவர் நள்ளிரவிலும் தொடர்ந்து பேசி வந்தது தெரியவந்தது. துஷாரைப் பிடித்து போலீசார் விசாரித்த போது, அவருக்கும் தாமினிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்தது ஒப்புக்கொள்ளப்பட்டது. அதுமட்டுமின்றி, அதுல் பன்வாரின் பெயரில் உள்ள 20 லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ் பணத்தை அடைவதற்காகவும், தங்களது காதலுக்கு முட்டுக்கட்டையாக இருந்த அவரை அகற்றுவதற்காகவும் இருவரும் சேர்ந்து இந்த விசித்திரக் கொலைத் திட்டத்தைத் தீட்டியது அம்பலமானது.
துஷாரின் மொபைல் போனை சோதித்த போது, அதில் பெட்டிக்குள் அடைக்கப்பட்டிருந்த ஒரு பாம்பின் புகைப்படம் இருந்தது போலீசாருக்கு முக்கிய ஆதாரமாகக் கிடைத்தது. விசாரணையில், இரு பாம்பாட்டிகளிடம் இருந்து துஷார் இந்த விஷப்பாம்பை விலைக்கு வாங்கியதாகத் தெரிவித்துள்ளார். திட்டத்தின்படி, வியாழக்கிழமை இரவு அதுல் பன்வாருக்குக் கொடுக்கப்பட்ட பாலில் அதிக அளவு தூக்க மாத்திரைகளைத் தாமினி கலந்து கொடுத்துள்ளார். அவர் மயங்கி விழுந்த பிறகு, சோனு மற்றும் உதய் என்ற இரு கூட்டாளிகளின் உதவியோடு, விஷப்பாம்பை அதுலின் போர்வையின் உள்ளே விட்டுள்ளனர். அந்தப் பாம்பு கடித்தே அதுல் பன்வார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இன்சூரன்ஸ் பணம் கிடைத்ததும் உதவிய கூட்டாளிகளுக்கு 5 லட்சம் தருவதாகக் காதலர்கள் வாக்குறுதி அளித்துள்ளனர்.
முன்னதாக 20 நாட்களுக்கு முன்பே, அதுல் பன்வாரை துஷார் தனது காரால் மோதிக் கொல்ல முயன்றதும், அப்போது அதுல் ஹெல்மெட் அணிந்திருந்ததால் உயிர் தப்பியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்பொழுது கொலைக்குக் காரணமான மனைவி தாமினி, அவரது காதலன் துஷார் மற்றும் கூட்டாளிகளைக் கைது செய்துள்ள போலீசார், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட பாம்பையும் ஆய்வுக்காக அனுப்பியுள்ளனர். அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக மீரட் எஸ்பி தெரிவித்துள்ளார்.
