ராஜஸ்தான் மாநிலத்தில் கொலை வழக்கில் தண்டனை பெற்று ஜோத்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் இருவர், சிறை வளாகத்திற்குள்ளேயே திருமணம் செய்து கொள்ள அம்மாநில உயர் நீதிமன்றம் சிறப்பான அனுமதியை வழங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த விசித்திரமான மற்றும் பரப்பரப்பான சம்பவம் சட்ட வட்டாரங்களில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் மூலாராம் (33) மற்றும் சீமா காட்சே (31) ஆகிய இரு கைதிகளும் ஜோத்பூர் சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். சிறை வளாகத்தில் ஏற்பட்ட சந்திப்பு நாளடைவில் இவர்களிடையே காதலாக மலர்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இருவரும் முறைப்படி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, அதற்கு அனுமதி கோரி நீதிமன்றத்தை நாடினர்.
இவர்களது மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், வரும் ஜூலை 22-ஆம் தேதி ஜோத்பூர் சிறை வளாகத்திற்குள்ளேயே இவர்களது திருமணத்தை நடத்த அனுமதி அளித்துள்ளது. மேலும், இந்த சிறைச்சாலை திருமண நிகழ்வில் மணமக்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உள்ளிட்ட வெளியில் இருந்து வரும் 21 பேர் வரை கலந்து கொள்ளவும் நீதிமன்றம் நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
