உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், அழகுக்காக உடலில் பச்சைக் குத்திக் கொள்ளும் (டாட்டூ) ஃபேஷன் மோகம், பெண் ஒருவரின் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றிப் போட்டுள்ள அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. டெல்லியில் உள்ள ஒரு டாட்டூ பார்லரில் பச்சைக் குத்திக் கொண்ட சில நாட்களிலேயே, அந்தப் பெண்ணுக்கு உடலில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து, கான்பூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்குச் சென்று அவர் சிகிச்சை பெற்ற போது, அவருக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் டாட்டூ பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட அந்தப் பெண், தனது பிறப்புறுப்பில் ஏற்பட்ட கடுமையான தொற்று  காரணமாகவே மருத்துவக் கல்லூரியின் தோல் நோய் நிபுணர் டாக்டர் ஸ்வேதாங்கிடம் சிகிச்சைக்காக வந்துள்ளார். அவரது பாதிப்பின் தீவிரத்தைக் கண்ட மருத்துவர்கள், சந்தேகத்தின் அடிப்படையில் எச்.ஐ.வி மற்றும் ஹெபடைடிஸ்-பி ஆகிய பரிசோதனைகளை மேற்கொள்ளப் பரிந்துரைத்தனர். பரிசோதனை முடிவுகள் வெளியான போது, அந்தப் பெண்ணுக்கு எச்.ஐ.வி பாதிப்பு இருப்பது உறுதியானது. டாட்டூ வரையும் போது பயன்படுத்தப்பட்ட ஊசி, முறையாகத் கிருமி நீக்கம்  செய்யப்படாமல் இருந்ததோ அல்லது ஏற்கனவே பாதிக்கப்பட்ட ஒருவருக்குப் பயன்படுத்திய ஊசியை மீண்டும் பயன்படுத்தியதோதான் இதற்குக் காரணமாக இருக்கக் கூடும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது அந்தப் பெண்ணுக்கு அரசு மருத்துவமனை மூலமாக இலவசமாக வழங்கப்படும் ‘ஏஆர்டி’ கூட்டு மாத்திரை சிகிச்சை உடனடியாகத் தொடங்கப்பட்டுள்ளது. எச்.ஐ.வி-க்கு நிரந்தரத் தீர்வு இல்லை என்றாலும், முறையான மருத்துவக் கண்காணிப்பு மற்றும் தினசரி மருந்துகள் மூலம் சாதாரண வாழ்க்கையை வாழ முடியும் என்று மருத்துவர்கள் அவருக்கு நம்பிக்கையூட்டியுள்ளனர். மேலும், டாட்டூவில் பயன்படுத்தப்படும் வண்ண மைகள், குறிப்பாகச் சிவப்பு மற்றும் பச்சை நிற மைகள் சிலருக்கு கடுமையான ஒவ்வாமை தோலில் தடிப்புகள், வீக்கம் மற்றும் ‘கிரானுலோமாட்டஸ்’ போன்ற தோல் நோய்களைக் கூட ஏற்படுத்தக் கூடும் என்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்தச் சம்பவத்தையடுத்து, இளைஞர்கள் மற்றும் டாட்டூ பிரியர்களுக்கு மருத்துவர்கள் அவசர விழிப்புணர்வு ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். அவசரப்பட்டு முறையான அங்கீகாரம் இல்லாத இடங்களில் டாட்டூ குத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், தரமான மற்றும் தூய்மையான டாட்டூ ஸ்டூடியோக்களை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். மிக முக்கியமாக, டாட்டூ கலைஞர் உங்கள் கண் முன்னால் புதிய சீல் வைக்கப்பட்ட ஊசியைத் திறந்து பயன்படுத்துகிறாரா என்பதை உறுதி செய்ய வேண்டும். அழகு மற்றும் ஃபேஷன் என்ற பெயரில் செய்யும் சிறிய அலட்சியம், வாழ்நாளையே முடக்கிவிடும் பேராபத்தாக முடியும் என்பதால் கூடுதல் விழிப்புணர்வு அவசியம் என்று கான்பூர் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.