மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எட்டு பேர், நல்ல கூலி வேலை கிடைக்கும் என்ற ஆசை வார்த்தைகளை நம்பி தமிழகத்திற்கு அழைத்து வரப்பட்டு, வேளாங்கண்ணியில் எந்த வேலையும் கொடுக்கப்படாமல் நடுவழியில் நயவஞ்சகமாக கைவிடப்பட்டுள்ளனர். அன்னிய மாநிலத்திற்கு வந்து, மொழியும் தெரியாமல், தங்குவதற்கோ அல்லது சாப்பாட்டிற்கோ கூட வழியில்லாமல் அந்த 8 பேரின் உயிர்களும் வேளாங்கண்ணி பகுதியில் நடுத்தெருவில் தவித்துக் கொண்டிருந்தன.

இந்த நெஞ்சை உருக்கும் அவல நிலை குறித்து தகவல் அறிந்த ‘சிங்கப்பெண் அதிரடி படையினர்’ சற்றும் தாமதிக்காமல் உடனடியாக களத்தில் குதித்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தவித்துக் கொண்டிருந்த ஒட்டுமொத்த குடும்பத்தையும் பத்திரமாக மீட்டனர். ​இவ்வாறு மீட்கப்பட்ட வடமாநில குடும்பத்தினருக்கு, தமிழக வருவாய்த்துறையினர் உடனடியாக பசியாற உணவும், குடிநீரும் வழங்கி தங்களது மனிதநேயத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

நடுத்தெருவில் தவித்த தங்களுக்கு உணவளித்து உயிர்காத்த அதிகாரிகளுக்கு அக்குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். தற்போது, பசியார வைக்கப்பட்ட அந்த 8 பேரையும் பத்திரமாக அவர்களது சொந்த ஊரான மகாராஷ்டிராவிற்கே திருப்பி அனுப்பி வைப்பதற்கான அனைத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் வருவாய் மற்றும் அதிரடி துறையினர் மிக தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.