பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது அண்ணன் செய்த ஒரு அன்பான செயலால், அவனது தம்பி திடீரென ஓவென்று கதறி அழுது அண்ணனை கட்டியணைத்த நெஞ்சை உருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது நெட்டிசன்களைப் பெருமளவில் கவர்ந்து வருகிறது.

பிரேசில் நாட்டின் பாரம்பரிய வழக்கப்படி, ஒருவரது பிறந்தநாளின் போது வெட்டப்படும் கேக்கின் முதல் துண்டை, தங்களது வாழ்க்கையில் மிகவும் முக்கியமான மற்றும் மதிப்பிற்குரிய நபருக்குத்தான் வழங்குவது வழக்கமாகும். அந்த வகையில், இந்த வீடியோவில் உள்ள சிறுவனும் தனது பிறந்தநாள் கேக்கின் முதல் துண்டை வெட்டி, பக்கத்தில் ஜாலியாக விளையாடிக்கொண்டிருந்த அவனது தம்பியின் கையில் தட்டில் வைத்து கொடுக்கிறான்.

அண்ணன் தன் மீது வைத்துள்ள பாசத்தையும், தனது அண்ணனின் வாழ்க்கையிலேயே தானே மிக முக்கியமான நபர் என்பதையும் உணர்ந்த அந்தத் தம்பி, சற்றும் எதிர்பாராத விதமாக ஆனந்தக் கண்ணீர் விட்டு, தேம்பித் தேம்பி அழுதுகொண்டே அண்ணனை இறுக்கமாகக் கட்டியணைத்துக் கொள்கிறான்.

தம்பியின் இந்த அதீத பாச வெளிப்பாட்டைக் கண்டு என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப் போன அந்த அண்ணனும், கேக் இல்லாத தனது மற்றொரு கையால் தம்பியை அரவணைத்து அன்பைப் பொழிகிறான். எக்ஸ் (X) வலைதளத்தில் பகிரப்பட்டுப் பயங்கர வைரலாகி வரும் இந்த க்யூட்டான பாசப் போராட்ட வீடியோவைப் பார்த்த பலரும், “இந்தத் தம்பிக்கு ஏதோ ஒரு மோசமான நாள் அமைந்திருக்கலாம், அவனுக்குத் தற்பொழுது தேவைப்பட்ட ஒரே ஆறுதல் இந்த அண்ணனின் அன்புதான்” என்றும், “பார்க்கும்போதே கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது” என்றும் உருகிப் போய் தங்களது கமெண்ட்களைப் பகிர்ந்து வருகின்றனர்.