மத்திய பாஜக அரசின் வெளியுறவுக் கொள்கைகள் மற்றும் நிர்வாகத் திறமையின்மையால் நாடு முழுவதும் கடுமையான சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மத்திய அரசை ஒரு “Failure Model” (தோல்வியடைந்த மாதிரி) என்று சாடியுள்ளார். தொலைநோக்குப் பார்வையும் இல்லை, வரவிருக்கும் சவால்களைச் சமாளிக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இல்லை என மத்திய அரசை அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
தொடர்ந்து தனது பதிவில், மத்திய அரசின் இத்தகைய தவறான முடிவுகளால் சாமானிய பொதுமக்கள்தான் சொல்லொண்ணாத் துயரத்திற்கு ஆளாகின்றனர் என்றும், இது மக்களுக்குத் தரப்படும் தேவையற்ற தொல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சிலிண்டர் தட்டுப்பாட்டால் இல்லத்தரசிகள் முதல் சிறு வணிகர்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த இக்கட்டான சூழ்நிலையைச் சீராக்கப் பிரதமர் நரேந்திர மோடி உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இந்த அதிரடிப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
