பள்ளிக்கு இரண்டு நிமிடங்கள் தாமதமாக வந்ததற்காக, 1-ம் வகுப்பு மாணவனை இரண்டு மணி நேரம் கடும் வெயிலில் நிற்க வைத்து தண்டித்த தனியார் பள்ளி நிர்வாகத்தின் மீது பெங்களூரு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பெங்களூரு எலகங்கா அட்டூர் லேஅவுட் பகுதியில் இயங்கி வரும் ஒரு தனியார் பள்ளியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தன்று முதலாம் வகுப்பு படிக்கும் சிறுவன், பள்ளிக்கு சுமார் இரண்டு நிமிடங்கள் தாமதமாக வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காக அந்தச் சிறுவனை பள்ளி நிர்வாகம் தண்டனை என்ற பெயரில், சுமார் இரண்டு மணி நேரம் கொளுத்தும் வெயிலில் வெளியே நிற்க வைத்ததாகப் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது குறித்துத் தகவலறிந்த சிறுவனின் பெற்றோர்கள் பள்ளிக்குச் சென்று விளக்கம் கேட்டுள்ளனர். அப்போது பள்ளியின் முதல்வர் மற்றும் ஊழியர்கள் மிகவும் அலட்சியமாகவும், திமிரான முறையிலும் பதில் அளித்ததாகப் பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளமான ‘X’ தளத்தில் பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானதை அடுத்து, பெங்களூரு நகர போலீசார் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
“குழந்தைகளுக்கு உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ துன்புறுத்தல் அளிப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். சிறுவனை வெயிலில் நிற்க வைத்த சம்பவம் தொடர்பாக, இளஞ்சிறார் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2015-ன் கீழ் பள்ளி நிர்வாகத்தின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுவனின் அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையிலான வீடியோக்களையோ அல்லது தகவல்களையோ சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம் என்று பொதுமக்களுக்குப் போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் நேரடியாகக் காவல்துறைக்கோ அல்லது குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவிற்கோ தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
