ஆந்திர மாநிலத்தில், வீட்டுக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளிலிருந்து வெளியேறிய நச்சுப் புகையைச் சுவாசித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவைச் சேர்ந்த முரளி என்பவர், தனது மோட்டார் சைக்கிளை அண்மையில் மெக்கானிக் ஷாப்பில் கொடுத்து எஞ்சின் சர்வீஸ் செய்துள்ளார். சர்வீஸ் முடிந்த பிறகு, எஞ்சின் சீராக இயங்குவதற்கு இரவு முழுவதும் பைக்கை ‘ஆன்’ (On) செய்து வைக்குமாறு மெக்கானிக் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, முரளி தனது பைக்கை வீட்டின் தரைத்தளத்தில் உள்ள அறைக்குள் நிறுத்தி, எஞ்சினை ஓடவிட்டுள்ளார். கதவுகள் மற்றும் ஜன்னல்கள் சரியாகத் திறக்கப்படாத நிலையில், எஞ்சினிலிருந்து வெளியேறிய நச்சுப் புகை (கார்பன் மோனாக்சைடு) வீடு முழுவதும் பரவியுள்ளது.
அப்போது அதே தரைத்தளத்தில் தூங்கிக் கொண்டிருந்த முரளியின் குடும்பத்தினர் நச்சுப் புகையைத் தெரியாமல் சுவாசித்துள்ளனர். இதில் முரளியின் 15 வயது மகன், முரளியின் 7 வயது இரட்டைப் பெண் குழந்தைகள், முரளியின் 75 வயது தந்தை, ஆகிய நான்கு பேரும் அதிகாலையிலேயே மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
வீட்டின் முதல் தளத்தில் தூங்கிக் கொண்டிருந்த முரளியும், அவரது மனைவியும் அதிர்ஷ்டவசமாக இந்த நச்சுப் புகையிலிருந்து தப்பி உயிர் பிழைத்துள்ளனர். காலையில் கீழே வந்து பார்த்தபோது, நான்கு பேரும் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அவர்கள் கதறி அழுதது அங்கிருந்தவர்களைக் கண்கலங்கச் செய்தது.
மேலும் தகவலறிந்து வந்த காவல்துறையினர் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மூடப்பட்ட அறைகளுக்குள் வாகனங்களை இயக்கி வைப்பது எவ்வளவு ஆபத்தானது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு கசப்பான பாடமாக அமைந்துள்ளது. இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
