முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை பதிவு செய்த சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அவரது சகோதரர் அசோக் குமார் தொடர்புடையதாக கூறப்பட்ட இடங்கள், அலுவலகங்களில் கடந்த 2023-ஆம் ஆண்டு சோதனை நடைபெற்றது. அப்போது செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு பைபாஸ் அறுவை சிகிச்சைக்குப் பின் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதே வழக்கில் முக்கிய சாட்சியாக கருதப்படும் அசோக் குமார், நீதிமன்ற சம்மனுக்கு பலமுறை ஆஜராகாத நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் திடீரென சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீனில் வெளியே வந்தார். தற்போது, இதய சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல அனுமதி கோரி மனுதாக்கல் செய்துள்ள அவர், அந்த மனுவை மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

இந்த மனுவை நீதிபதிகள் எம். எஸ். ரமேஷ் மற்றும் லட்சுமி நாராயணன் அமர்வு விசாரித்தபோது, அமலாக்கத் துறை தரப்பில், “அசோக் குமாருக்கு ஒன்பது முறை சம்மன் அனுப்பியும் அவர் ஒரு முறை கூட நேரில் ஆஜராகவில்லை. இந்தியாவிலேயே தேவையான சிகிச்சைகள் கிடைக்கும். அமெரிக்கா செல்ல அனுமதி வழங்கக் கூடாது,” என வாதிட்டது.

வழக்கு விசாரணையின் போது, நீதிபதிகள் “முடக்கப்பட்ட சொத்துக்கள் அமெரிக்காவில் உள்ளனவா?” என கேள்வி எழுப்ப, அதற்கு ‘இல்லை’ என அமலாக்கத் துறை பதிலளித்தது. தொடர்ந்து, “சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவமனை பெயர், விமான டிக்கெட், தங்குமிடம்” ஆகிய விவரங்களை தாக்கல் செய்ய அசோக் குமார் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், அந்த தகவல்களின் நம்பகத்தன்மையை அமலாக்கத்துறை ஆய்வு செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூலை 29-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது.