தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேற்று தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், தான் இந்த ஊர் மருமகன் என்ற உரிமையோடு வாக்கு கேட்க வந்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

எடப்பாடி பழனிசாமி தோல்வி பயத்தில் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்வதாகவும், அதிமுகவை பாஜக குத்தகைக்கு எடுத்துள்ளதால் தமிழகத்தின் உரிமைகளை விட்டுக்கொடுத்து பழனிசாமி பயந்து நடுங்குவதாகவும் அவர் சாடினார்.

மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாகக் குற்றம் சாட்டிய முதலமைச்சர், மதுரையில் பாஜக வெற்றி பெற்றால் தான் மெட்ரோ ரயில் தருவோம் என மராட்டிய முன்னாள் முதல்வர் மிரட்டுவது கண்டிக்கத்தக்கது என்றார்.

கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்ததற்கு மத்திய அரசின் ஊழலே காரணம் என்று விமர்சித்த அவர், செய்த சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்பது திராவிட மாடல் என்றும், வெறும் பொய்களையும் அவதூறுகளையும் மட்டும் பரப்புவது பழனிசாமி மாடல் என்றும் பேசினார்.