திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில், பிறந்து வெறும் 3 நாட்களே ஆன ஆண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். ‘மக்களுக்கான அரசு’ என்று பெருமை பேசிக்கொள்ளும் இந்த ஆட்சியில், ஒரு அரசு மருத்துவமனையில், பெற்ற தாயின் மடியில் இருந்தே குழந்தை பறிபோகும் அளவுக்குப் பாதுகாப்பு குறைபாடு இருப்பது மிகுந்த வேதனையளிப்பதாக அவர் சாடியுள்ளார்.

​இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசு மருத்துவமனையிலேயே இத்தகைய அவல நிலை அரங்கேறுவதை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் உடனடியாகத் தலையிட்டு, பாதிக்கப்பட்ட தாய்க்கு நியாயம் கிடைக்கவும், கடத்தப்பட்ட குழந்தையை மீட்கவும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை உரக்கச் சொல்லியிருப்பதாக விஜய் தனது கண்டனத்தில் தெரிவித்துள்ளார்.