காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது நாட்டில் நிலவிய பாதுகாப்பு சூழலையும், தற்போதைய மோடி அரசின் துணிச்சலான நடவடிக்கைகளையும் ஒப்பிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அதிரடியாகப் பேசியுள்ளார். “காங்கிரஸ் ஆட்சியின் போது ஒவ்வொரு நாளும் பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தினார்கள். ஆனால், அப்போதிருந்த ஆட்சியாளர்கள் அதைக் குறித்து வாய் திறக்கவே இல்லை” என்று அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், பிரதமர் மோடி பொறுப்பேற்ற பிறகுதான் பாதுகாப்புத் துறை பலமடைந்துள்ளதாகக் குறிப்பிட்டார். “புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா முதன்முறையாக வான்வழியாகப் புகுந்து பாகிஸ்தானுக்குப் பதிலடி கொடுத்தது. இதுதான் புதிய இந்தியாவின் பலம்” என்றார். மேலும், புதுச்சேரியின் முன்னாள் முதல்வர் நாராயணசாமியின் அரசு ஊழல் நிரம்பியதாக இருந்ததாகவும், மக்கள் நலனை விடச் சுயலாபத்திற்கே முன்னுரிமை அளிக்கப்பட்டதாகவும் அவர் தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
