தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யையும், நடிகை திரிஷாவையும் ஒப்பிட்டு பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன் பேசிய கருத்துக்கள் தற்போது தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன. தரம் தாழ்ந்த இந்த விமர்சனத்திற்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இன்று தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.

​சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவனிடம் இது குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டபோது, “ஒரு தேசியக் கட்சியின் பொறுப்பான பதவியில் இருக்கும் ஒருவர், ஒரு பெண்ணைப் பற்றியோ அல்லது சக அரசியல் தலைவரைப் பற்றியோ இத்தகைய கருத்துக்களைத் தெரிவிப்பது சற்றும் ஏற்புடையதல்ல” என்று அவர் சாடினார். அரசியலில் நாகரிகம் மிக முக்கியம் என்று குறிப்பிட்ட அவர், நயினார் நாகேந்திரனின் பேச்சு அநாகரிகத்தின் உச்சம் என்றும், இது போன்ற பேச்சுகளைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.