தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள கே.வேட்ரப்பட்டியைச் சேர்ந்தவர் 32 வயதான சிலம்பரசன். இவர் அரூர், திரு.வி.க. நகரில் கடந்த 7 ஆண்டுகளாக ஜிம் மற்றும் பிட்னஸ் சென்டர் நடத்தி வந்துள்ளார். இந்த ஜிம்முக்கு வரும் ஒரு பெண்ணின்  (பிளஸ்-1 படிக்கும்) மகளுடன் சிலம்பரசனுக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம், சிலம்பரசன் அந்த மாணவியையும் அவரது தோழியையும் காரில் வீட்டில் விடுவதாகக் கூறி அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், அவர் மாணவியின் வீட்டிற்குச் செல்லாமல், கடத்தூர் செல்லும் சாலையில் காரை நிறுத்தி, குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து மாணவிக்குப் பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தை வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என்றும் மாணவியை மிரட்டி உள்ளார்.

நடந்த கொடுமைகளை மாணவி தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அவரது தாய் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சிலம்பரசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சிலம்பரசன் ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ள நிலையில், அவர் மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.