சமூகத்தில் இளைஞர்கள் எதிர்கொள்ளும் உளவியல் சிக்கல்கள் சமீப காலமாக மோசமடைந்து வருகின்றன. குறிப்பாக இளம் பருவத்தினர் அதிக அளவில் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுவது தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது. காதலுக்காக என்ற பெயரில், இளம் தலைமுறையினர் தங்கள் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்காமல், ஆவேசமான முடிவுகளை மிக எளிதாக எடுக்கின்றனர்.
இத்தகைய போக்கு, இளம் பருவத்தினரின் பயத்தையும், போராட்ட குணமின்மையையும் வெளிப்படுத்துவதாகக் கருதப்படுகிறது. வாழ்க்கையில் தினசரி ஏதேனும் ஒரு உளவியல் சிக்கல் வருவது இயல்புதான்; ஆனால் அதை நாம் எவ்வாறு கையாளுகிறோம் என்பதில்தான் நமது எதிர்காலமே அடங்கியுள்ளது.
அப்படிப்பட்ட ஒரு துயரச் சம்பவம்தான் சமீபத்தில் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் நிகழ்ந்துள்ளது. வேலம்பாடி கிராமத்தைச் சேர்ந்த வசந்தகுமார் (இளைஞர்) அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவியை கடந்த மூன்று வருடங்களாகக் காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலைப் பெற்றோர் கடுமையாக எதிர்த்த நிலையில், இருவரும் தற்கொலை செய்துகொள்ளும் விபரீத முடிவுக்கு வந்துள்ளனர்.
மாணவியின் வீட்டில் யாரும் இல்லாதபோது அங்கு வந்த வசந்தகுமார், சிறுமியின் கழுத்தை பிளேடால் அறுத்துவிட்டு, பிறகு அதே வீட்டில் சேலையால் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். சிறிது நேரத்திற்குப் பிறகு வீட்டிற்கு வந்த பெற்றோர் இருவரையும் மருத்துவமனையில் சேர்த்தபோது, மாணவி மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். இந்தச் சம்பவம் குறித்து அரவக்குறிச்சி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
