திருப்பத்தூர் மாவட்டம் படகு குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் மேரி. இவரது கணவர் சுப்பிரமணி. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்களும் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு மகளும் உள்ளனர். மேரி அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். சம்பவம் நடந்த அன்று மனநலம் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த தமிழரசன் என்பவர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். மகளின்சத்தம் கேட்டு அங்கு சென்ற மேரி தமிழரசனை கீழே தள்ளிவிட்டு கண்டித்தார். அதற்கு இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டிவிட்டு தமிழரசன் தப்பியோடியதாக தெரிகிறது.
இதுகுறித்து மேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு அளிக்கப்பட்ட நிலையில் தமிழரசனுக்கு நீதிபதி 9 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவு பிறப்பித்தார்.
