சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்படும் விஷயம் தற்போது இன்ஸ்டாகிராமில் வெளிவரும் ரீல்ஸ்கள். வாட்ஸ்அப், பேஸ்புக், எக்ஸ் போன்றவற்றை விட இன்ஸ்டாகிராம் அதிக பொழுதுபோக்கு அம்சங்களால் இளைஞர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

பலர் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் விதத்தில் வீடியோக்களை பதிவேற்றம் செய்கிறார்கள். ஆனால், அண்மைக் காலமாக சில ரீல்ஸ்கள் எல்லை மீறி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை ஊக்குவிக்கும் விதமாகவும், வன்முறையை பெருமைப்படுத்தும் விதமாகவும் வெளியிடப்பட்டு வருவது சமூகத்தில் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கவலை தெரிவித்த நிலையில், சமூகத்தில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் விதத்தில் வெளிவரும் வீடியோக்களை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை காவல்துறைக்கு வலுத்தது. இதனைத் தொடர்ந்து, இன்ஸ்டாகிராம் நிறுவனத்துக்கு விரைவில் அதிகாரப்பூர்வ கடிதம் அனுப்பப்பட உள்ளது என்று சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் அறிவித்துள்ளார்.

மேலும், இனி யாராவது வன்முறையை தூண்டும் வகையிலான ரீல்ஸ்கள் அல்லது பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை ஊக்குவிக்கும் வீடியோக்கள் வெளியிட்டால், அவர்களின் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். சமூக வலைதளங்களை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் என்பதையும், அப்படி செய்யாதவர்கள் மீது எந்தத் தளர்வும் காட்டப்படாது என்பதையும் காவல் ஆணையர் தெளிவுபடுத்தியுள்ளார்.