அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம், டல்லாஸ் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் ஏடன் மெக்மில்லன், தனது வீட்டில் ஒரு செயல்பாட்டு அணுக்கரு உலையை (Nuclear Fusion Reactor) உருவாக்கி கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். கொரோனா லாக்டவுன் காலத்தில், தனது 8-வது வயதிலேயே அணு இயற்பியல் குறித்த ஆராய்ச்சிகளில் ஆர்வம் காட்டிய ஏடன், நான்கு ஆண்டுகால தீவிர உழைப்பிற்குப் பிறகு இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். லாஞ்ச்பேட் (Launchpad) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியுடன், பல தோல்விகளையும் சவால்களையும் கடந்து வெற்றிகரமாக நியூட்ரான்களை உற்பத்தி செய்து, அணுக்கரு இணைவு நிகழ்ந்ததை உறுதி செய்துள்ளார்.

​”இது எனக்கு ஓடவோ, குதிக்கவோ உதவாது, ஆனால் இது எதிர்காலத்திற்கான தூய்மையான ஆற்றல்” என்று கூறும் ஏடன், தனது ஆர்வத்தின் காரணமாகவே இந்தத் திட்டத்தை முன்னெடுத்ததாகத் தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் மகனின் பாதுகாப்பு குறித்து கவலைப்பட்ட அவரது தாய், பின்னர் அதன் நுணுக்கங்களைப் புரிந்து கொண்டு முழு ஆதரவு அளித்துள்ளார். 12 வயதிலேயே அணுக்கரு உலையை உருவாக்கிய இந்தச் சிறுவனின் அறிவுத்திறனைப் பார்த்து உலகமே வியந்து பாராட்டி வரும் நிலையில், இந்தியாவின் கல்வி முறை மற்றும் அமெரிக்காவின் கல்வி முறை குறித்த விவாதங்களும் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளன.