பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அலிபூர் கிராமத்தைச் சேர்ந்த அர்ஷ்தீப் சிங், கடும் குளிரில் இருந்து தப்பிக்க தனது மனைவி, ஒன்றரை வயது மகன் மற்றும் 10 வயது சிறுமியுடன் ஒரு அறைக்குள் தீ மூட்டி உறங்கியுள்ளார்.
குளிரைத் தடுக்க அறையின் கதவு மற்றும் ஜன்னல்களை இறுக்கமாக மூடியிருந்ததால், நெருப்பில் இருந்து வெளியேறிய கரியமில வாயு மற்றும் புகையினால் அவர்கள் அனைவருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கியுள்ளனர்.
மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது நான்கு பேரும் மயக்க நிலையில் கிடந்தனர். அவர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அர்ஷ்தீப் சிங், அவரது மனைவி மற்றும் குழந்தை ஆகிய மூவரும் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் 10 வயது சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
