கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள குடும்ப நீதிமன்றத்தின் வெளியே, விவாகரத்து தீர்ப்புக்குப் பின் பெண் ஒருவர் தனது முன்னாள் கணவரை சரமாரியாகத் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. மென்பொருள் பொறியாளரான அந்தப் பெண், தனது கணவரிடம் மாதந்தோறும் 6 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் (Alimony) கோரியதாகவும், ஆனால் அந்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்து, ‘பூஜ்ஜியம்’ ரூபாய் என தீர்ப்பளித்ததாகவும் கூறப்படுகிறது.

தீர்ப்பு வருவதற்கு முன்னதாகவே சாமர்த்தியமாகத் தனது சொத்துக்கள் அனைத்தையும் அந்த நபர் தனது தாயார் பெயருக்கு மாற்றியதால், அவருக்கு வருமானம் ஏதுமில்லை என்ற அடிப்படையில் ஜீவனாம்சம் மறுக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் கோபமடைந்த அப்பெண் நீதிமன்ற வளாகத்திலேயே முன்னாள் கணவரின் தலைமுடியைப் பிடித்து இழுத்துத் தாக்கியபோதும், சற்றும் கோபப்படாமல் அந்த நபர் புன்னகையுடனே எதிர்கொண்டது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.