தமிழகத்தின் கோவை இருகூர் பகுதியில் கடந்த 15-ம் தேதி மீன் பிடிக்கச் சென்ற இடத்தில் மாயமான 13 வயது பள்ளிச் சிறுவன் ரித்தீஸ், விளையாட்டின் போது ஏற்பட்ட சாதாரண தகராறில் அவனது நண்பர்களாலேயே கற்கள் மற்றும் மதுபாட்டில்களால் அடித்துக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள திடுக்கிடும் உண்மை அம்பலமாகி ஒட்டுமொத்த மாநிலத்தையும் உரைய வைத்துள்ளது.

இருகூர் நியூ காலனியைச் சேர்ந்த பாரதிராஜாவின் மகனான ரித்தீஸ், அரசுப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், கடந்த 15-ம் தேதி மாலை மாசாணி அம்மன் கோவில் அருகே உள்ள கால்வாயில் நண்பர்களுடன் மீன் பிடிக்கச் சென்றபோது திடீரென மாயமானார்.

ஆரம்பத்தில், மர்ம நபர் ஒருவர் அச்சிறுவனை உறவினர் என்று கூறி இருசக்கர வாகனத்தில் ஏற்றிச் சென்றதாகத் தகவல் பரவியதால், கோவை போலீசார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்; ஆனால், போலீசார் நடத்திய அனல் பறக்கும் கிடுக்கிப்பிடி விசாரணையில், விளையாடும் போது இவர்களுக்குள் ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றியதில், ஆத்திரமடைந்த ரித்தீஸின் நண்பர்களான 13 மற்றும் 15 வயதுடைய இரு சிறுவர்களே ரித்தீஸை ஓட ஓட விரட்டி, கற்களாலும் மதுபாட்டில்களாலும் கொடூரமாகத் தாக்கி உயிரைப் பறித்தது தெரியவந்துள்ளது.

தற்போது சிறுவனின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்துள்ள போலீசார், கைது செய்யப்பட்டுள்ள அந்த இரு சிறுவர்களிடமும் இந்த கொடூரக் கொலைக்கு வேறு ஏதேனும் அதிர்ச்சிப் பின்னணி உள்ளதா என்ற கோணத்தில் நள்ளிரவிலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.