தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் காதலித்த ஒரே காரணத்திற்காக 18 வயது வாலிபர் ஒருவர் நடுரோட்டில் ஓட ஓட விரட்டிக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த மாநிலத்தையும் உலுக்கியுள்ளது.

கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையம் அருகே நேற்றிரவு (மே 17) அரங்கேறிய இந்த கொடூர சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த சஞ்சய் என்ற 18 வயது வாலிபர் ரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த பயங்கரம் குறித்து கோவில்பட்டி போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில், சஞ்சய் பக்கத்து ஊரைச் சேர்ந்த பெண் ஒருவரைக் காதலித்து வந்ததும், அதற்கு அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததும் தெரியவந்தது.

ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற பெண்ணின் தந்தை குமார் மற்றும் அவரது உறவினர்கள் இருவர் சேர்ந்து, நேற்றிரவு சஞ்சயை வழிமறித்துக் கத்தியால் குத்திக் கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. தமிழகத்தையே உரைய வைத்துள்ள இந்த ஆணவக் கொலைச் சம்பவம் தொடர்பாகப் பெண்ணின் தந்தை குமார் உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் நள்ளிரவிலேயே அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.