தமிழக அரசியல் களத்தில் தவெக மற்றும் திமுக இடையே நாளுக்கு நாள் வார்த்தை போர்கள் முற்றி வரும் நிலையில், தவெக அமைச்சரான ஆதவ் அர்ஜுனா குறித்து திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியுள்ள மிரட்டல் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பூகம்பத்தைக் கிளப்பியுள்ளது. தூத்துக்குடியில் நடைபெற்ற கட்சிப் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், தவெக-வில் இருக்கும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தொடர்ந்து தங்களது தலைவரான மு.க.ஸ்டாலின் அவர்களையும், இளம் தலைவரான உதயநிதி ஸ்டாலின் அவர்களையும் தேவையில்லாமல் சீண்டிப் பார்த்து வருவதாகக் கடுமையாகச் சாடியுள்ளார்.

​மேலும் அவர் பேசுகையில், “இப்படியே தொடர்ந்து ஆதவ் அர்ஜுனா பேசிக்கொண்டிருந்தால், அவர் தூத்துக்குடி மாவட்டத்திற்குள் நுழையும் போது அவரது சட்டை கிழியும் நிலையை எங்கள் பகுதி திமுக தொண்டர்கள் உருவாக்குவார்கள்” என்று பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். தவெக அமைச்சருக்கு எதிராக திமுக-வின் சீனியர் தலைவர் ஒருவர் இவ்வளவு ஆக்ரோஷமாகவும், நேரடியாகவும் மிரட்டல் விடுத்துப் பேசியுள்ளது இரு கட்சித் தொண்டர்களிடையே பெரும் பதற்றத்தையும், சோசியல் மீடியாவில் கடுமையான விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.