திருச்சி ஐ.ஜி. பங்களா முன்பு நேற்று இரவு பரமக்குடியைச் சேர்ந்த கல்லூரி வாலிபர் ஒருவர், தனது காதலியான எம்பிஏ மாணவியைத் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கியும், கல்லால் தலையில் அடித்தும் கொடூரமாகக் கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த வியாகுல நவீன் (22) என்ற அந்த வாலிபர், திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இளங்கலை படிப்பு முடித்துவிட்டு, தற்போது ஒரு ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அவருக்கும், திருச்சியில் உள்ள மற்றொரு தனியார் கல்லூரியில் இளங்கலை முடித்துவிட்டு, தற்போது அரசு கலைக்கல்லூரியில் எம்பிஏ படித்துக்கொண்டு பகுதிநேரமாக வேலை பார்த்து வரும் மாணவி ஒருவருக்கும் இடையே கடந்த 3 ஆண்டுகளாகக் காதல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், சமீபத்தில் மாணவியின் பெற்றோர் வீட்டில் இவர்களது காதலுக்குக் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதனையடுத்து நேற்று இரவு திருச்சி ஐ.ஜி. பங்களா முன்பு இருவரும் சந்தித்து நீண்ட நேரமாகப் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, தனது தந்தை காதலுக்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவிப்பதாக அந்த மாணவி நவீனிடம் கூறியுள்ளார். மேலும், “உன்னிடம் சொந்தமாக காரோ, பைக்கோ இருக்கிறதா?” என்று கேட்டு அவர் நவீனை வெறுப்பேற்றியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற நவீன், எதிர்பாராத விதமாக மாணவியின் கழுத்தைத் துப்பட்டாவால் இறுக்கியுள்ளார். இதில் மூச்சுத்திணறி மாணவி மயங்கி விழுந்த பின்னரும் ஆத்திரம் அடங்காத நவீன், அருகில் கிடந்த ஒரு பெரிய கல்லை எடுத்து அவரது தலையில் ஓங்கி அடித்துக் கொடூரத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.
லத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்த மாணவியை மீட்ட போலீசார், அவரை ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துச் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மேலும், காதலியைக் கொடூரமாகத் தாக்கிய காதலன் வியாகுல நவீனைப் பொதுமக்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இப்புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் வாலிபரைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, காதலன் மாணவியைக் கொடூரமாகத் தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பார்ப்போரை உலுக்கியுள்ளதுடன், இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
