ஆந்திர மாநிலம் அம்பேத்கர் கோணசீமா மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் நிகழ்ந்த துரதிர்ஷ்டவசமான விபத்தில், இரண்டாம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜி.பெத்தபூடி பகுதியில் உள்ள ஆரம்பப் பள்ளியில் மதிய உணவு இடைவேளையின் போது மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கிருந்த சிமெண்டால் ஆன மான் சிலை திடீரென சரிந்து விழுந்ததில், திவி ஜாஹ்னவி என்ற சிறுமி அதன் அடியில் சிக்கி பலத்த காயமடைந்தார். உடனடியாக மீட்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி அந்த மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், மாணவியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பள்ளி வளாகத்தில் இருந்த சிலையின் உறுதித்தன்மை குறித்தும், விபத்து நிகழ்ந்த விதம் குறித்தும் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பள்ளி வளாகத்திற்குள் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாததே இத்தகைய விபத்துக்குக் காரணம் எனப் பெற்றோர்களும் பொதுமக்களும் குற்றம் சாட்டியுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
