மனிதநேயமே இல்லாமல் தனது மனைவியையும், குழந்தையையும் வதைத்த கணவனின் செயல் பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ருக்ஸானா. இவரது கணவர் முகமது ஜலால். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளனர்.
ஜலால் மற்றும் அவரது குடும்பத்தினர் ருக்ஸானாவைத் தொடர்ந்து வரதட்சணை கேட்டுத் துன்புறுத்தி வந்ததோடு, பெண் குழந்தைகள் பிறந்ததால் ஆத்திரத்தில் இருந்துள்ளனர். ஒரு கட்டத்தில், தனது சொந்த மகளையே விற்று பணம் சம்பாதிக்கலாம் என ஜலால் வற்புறுத்தியுள்ளார்.
இதற்கு ருக்ஸானா கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த ஜலால், தனது தந்தை மற்றும் சகோதரருடன் சேர்ந்து ருக்ஸானாவை சரமாரியாகத் தாக்கியுள்ளார்.
பின்னர், அவர் வாயில் வலுக்கட்டாயமாக ஆசிடை ஊற்றிக் கொல்ல முயன்றுள்ளனர். உயிருக்குப் போராடிய ருக்ஸானாவை மீட்ட உறவினர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த சம்பவம் குறித்து ருக்ஸானாவின் 10 வயது மகள் போலீசாரிடம், “என் அப்பாவும், தாத்தாவும் தான் அம்மாவை அடித்து ஆசிட் குடிக்க வைத்தார்கள்” என அழுதுகொண்டே வாக்குமூலம் அளித்தது அனைவரையும் கலங்கச் செய்துள்ளது. தப்பியோடிய ஜலாலை போலீசார் தேடி வருகின்றனர்.
