உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் உள்ள பீட்சா கடைக்குச் சாப்பிடச் சென்ற 21 வயது இளைஞரையும், 19 வயதுப் பெண்ணையும் ஒரு கும்பல் சூழ்ந்து கொண்டு, அவர்களின் மதம் மற்றும் சாதி குறித்துக் கேட்டு மிரட்டியுள்ளது. தாங்கள் இந்துக்கள் தான் என்று அவர்கள் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல், அந்த ஜோடியை வீடியோ எடுத்து அந்த கும்பல் அச்சுறுத்தியுள்ளது. இந்தத் திடீர் மிரட்டலால் பயந்துபோன அந்த ஜோடி, தங்களைக் காப்பாற்றிக்கொள்ள வேறு வழியின்றி கடையின் 2-வது மாடி ஜன்னல் வழியாகக் கீழே குதித்துள்ளனர்.

​கீழே குதித்ததில் படுகாயமடைந்த இருவரும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பொது இடத்தில் தனிமனித சுதந்திரத்தைத் தலையிட்டு, அவர்களை உயிரையே மாய்த்துக்கொள்ளும் நிலைக்குத் தள்ளிய இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனிதாபிமானமற்ற இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.