தமிழகத்தில் சம வேலைக்குச் சம ஊதியம் கோரி இடைநிலை ஆசிரியர்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், பாஜக சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் திமுக அரசுக்கு எதிராகப் பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். பல கோடி ரூபாய் செலவு செய்து “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” என்ற பெயரில் அரசு விழாக்களை ஆடம்பரமாக நடத்தத் தெரிந்த திமுக அரசுக்கு, ஏழை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க மட்டும் பணமில்லையா? என அவர் தனது X (ட்விட்டர்) தளத்தில் ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
”அரசுப் பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாத முதல்வர், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற ஏன் தயங்குகிறார்?” எனச் சாடியுள்ள நயினார், இது இடைநிலை ஆசிரியர் குடும்பங்களின் வயிற்றில் அடிக்கும் செயல் என்று குறிப்பிட்டுள்ளார். தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதி 311-ஐ நிறைவேற்ற முதல்வருக்கு ‘மனமில்லையா அல்லது பணமில்லையா?’ என அவர் விடுத்துள்ள கேள்வி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆசிரியர்களின் இந்தப் போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள்வது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
